Monday, July 6, 2020

தமிழகத்தில் 2200 ஆண்டுகளாக தொடரும் சித்தர் மரபு - தமிழிக்கல்வெட்டு சான்று, ஒரு பார்வை

ஆ.மணிகண்டன் , வே.ராஜகுரு 

கிண்ணி மங்கலம் சித்தர் மரபு  :

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்களுக்கு கல்விகலைமருத்துவம்வானவியல்ரசவாதம்போர்ப்பயிற்சிராஜதந்திரங்கள்ராஜயோகம் என 16 விதமான கலைகளைக் போதித்து, பரம்பரையாக 66 குருமார்களையும் இதே இடத்தில் சமாதியாக்கி வந்திருக்கின்றனர். தற்போது குருகுலத்தில் 67 ஆவது குருவாக திரு. அருளானந்த சுவாமிகள் உள்ளார்.

முன்னோர்களை சமாதி ஆக்கும் போது லிங்கம் வைத்து பள்ளிப்படை ஆக்குவதும் அவர்களை அந்த உருவிலேயே வணங்கி வருவதும் மரபுஅதனை தொடர்கிறார்கள். சங்க காலத்தில் எவ்வாறு குருகுலம் செயல்பட்டு வந்ததோ அதே போன்று இன்றளவும் கட்டணமின்றி  மக்களுக்கு கல்விகலை மற்றும் தொழில் நுணுக்கங்களைபோர்த் தந்திரங்களை உள்ளிட்ட தமிழர் கலைகளை கற்றுத்தரும் மையமாக உள்ளது.

கல்வெட்டு கண்டுபிடிப்பு குறித்த அறிமுகம் :

கிண்ணி மங்கலம் தமிழிக்கல்வெட்டை மரபு ஆர்வலர்கள் திரு ச.ஆனந்தன் ,திரு. இரா. இராஜவேல், பாறை ஓவிய ஆய்வாளர் திரு. காந்திராஜன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

கல்வெட்டு அமைந்துள்ள இடம் : 

 கல்வெட்டு மதுரை கிண்ணிமங்கலத்தில் கிடைத்திருக்கும் தமிழிக் கல்வெட்டு மதுரைக்கு மேற்கில் சுமார் 20 கிமீ தொலைவில் செக்காணூரணி திருமங்கலம் சாலையில் கிண்ணிமங்கலம் கிராமத்தில் ஏகநாதன் குருகுல வளாகத்தில் உள்ளது.


 


கல்வெட்டின் காலம் :.

எழுத்து வடிவத்தைக் கொண்டு கிமு. மூன்றாம் நூற்றாண்டாகக் கணிக்க வாய்ப்புண்டு என கல்வெட்டை கண்டுபிடித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வெட்டு :

 கல் தூணில் தமிழி கல்வெட்டு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை, தமிழி கல்வெட்டு 26 செ.மீ அகலமும் 56 செ.மீ உயரமும்நான்முகத்துப் பாதமும், அறுபட்டைத் கம்புப்பகுதியும் கொண்ட கொண்ட தூண். அறுபட்டை ஆரம்பிக்கும் இடத்தில் மூன்று முகமுத்திலும் முதல் வரியில் ஏ க ன் ஆ த ன்” எனவும் இரண்டாவது வரியாக கோ ட் ட ம்” என உள்ளது.

 மடத்தில் கிடக்கும் மற்றொரு கல்வெட்டு ஒரு அடி நீள அகலம் கொண்டது. கருங்கல்லின் முகப்புப் பகுதியில் இறையிலியாக ஏகநாதன் பள்ளிப்படை மண்டளி யீந்தார்

என்ற வாசகம் ஐந்து வரிகளாகப் பொறிக்கப் பட்டுள்ளது. நன்காவது வரி முடிவில் பாண்டியர் சின்னமான இரட்டை மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியில் கிண்ண வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.

       


 சித்தர் மரபின் சிறப்பு :

 தமிழர் வாழ்வியல் வரலாற்றில் இந்த தமிழிக்கல்வெட்டு புதிய பரிமாணத்தை தரவல்லது. பல்வேறு பண்பாட்டு முடிச்சுகளை அவிழ்த்திருக்கிறது. இந்தக்கல்வெட்டு வாசிக்கப்படுவதற்கு முன்னதாகவே இந்த கல்வெட்டில் ஏகநாதன் கோட்டம் என்ற செய்தி பொறிப்பு உள்ளது என 67 ஆவது சித்த மடத்தலைவர் அருளானந்தம் கூறிய செய்தி,  கல்வெட்டிலும் அப்படியே பொறிக்கப்பட்டிருந்தது, கல்வெட்டை வெளிப்படுத்திய தொல்லியல் ஆர்வலர்களுக்கு வியப்பை தந்துள்ளது. 

    இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கல்வெட்டில் ஏகன் ஆதன் கோட்டம்’ என எழுதப்பட்டுள்ளது குறித்து கல்வெட்டின் எழுத்துருக்களை வாசிக்கத்தெரியாத மடத்தின் சித்தர் எப்படி கூற முடியும் , அதற்கு அந்த சித்தரின் பதில் இங்குள்ள ஒவ்வொரு பொருட்களையும் பற்றிய தகவல் எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது, என்கிறார்.

    எனில் 16 வகையான கலைகள் கற்றுத்தரப்படுவதுபோல  சுமார் இராண்டாயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் உள்ள செய்தி வரை செவி வழி கற்பித்தலாக சித்தர் வழி மரபுக்கு  கடத்தப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

   இரண்டாயிரம் ஆண்டுகளாக இயங்கும் மருத்துவ சாலை , கல்விச்சாலை , சித்தர் மரபு , போர்க்கலை பயிற்சி மையம் இதுவே எனும்போது பிரமிப்பாக உள்ளது.

முன்னோர் வழிபாடும் வளர்ச்சியும் :

    உலகலாவிய பண்பாட்டு மரபைப் பொறுத்தவரையில், முன்னோர்களை வழிபடும் முறைதான் முந்தி நிற்கிறதுஅதே  அடிப்படையில் தமிழகத்திலும் மூன்னோர்  வழிபாட்டு முறைதான் பின்னாளில் கோயில் கட்டுமானத்திற்கான அடிப்படை என்பதை விளக்குகிற விதத்தில்,  தமிழர் வரலாற்றில் கல்வெட்டு சான்றுடன் கூடிய ஒரு தொடர் சந்ததியாக இங்கு வசிப்பவர்களையும் அவர்களின் முன்னோர்களையும் நாம் கருதலாம்.

இராண்டாயிரம் ஆண்டு மரபும் , கல்வெட்டு சான்றும்     

இந்திய அளவில் பல வழிபாட்டு தலைமுறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயங்கி வருவதாக கூறி வந்தாலும் அவற்றை தொல்லியல் ரீதியில் உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 2000 ஆண்டுகளுக்கு மேம்பட்ட ஒரு சந்ததி தொடர்பினைக் கொண்டது ஏகநாதன் சித்தர் மடம்  கல்வெட்டு சான்றின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரே சித்தர் மரபாக உள்ளது.

 கந்து வழிபாடு :

  தமிழிக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்தூண் தமிழர் மரபுப்படி அடிப்பகுதி நான்கு பக்கங்களும்,  அதன் மேற்புறத்தில் எண்பட்டைகளையும் கொண்ட லிங்க வழிபாட்டு முறையின் முன்னோடியான கந்து (கல்தூண்) வழிபாட்டு தூணாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

 கோட்டமும் சித்தர் மரபும் : 

 கோட்டம் என்ற சொல் கோவில்,  சொல்லுக்கு அரசன் வீடாகிய அரண்மனைதெய்வ வீடாகிய திருக்கோவில்துறவியர் தங்கும் மடம் ஆகிய பொருளுமுண்டு. கோட்டம் என்ற சொல்லுக்கு கோவில் என்ற பொருளுடன்  புறநானூறு  299 ஆம் பாடலில் முருகன் கோட்டம் பற்றி குறிப்பிடப்படுகிறது. மணிமேகலையில்  "சுடு மண்ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும்" (மணிமே.6:54 - 59) என்கிறது .

கோட்டமும் தமிழர் வழிபாடும் :

தமிழர் வழிபாட்டு முறை சார்ந்த பல்வேறு கருதுகோள்கள் முன் வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக தமிழர்களின் கட்டிடக்கலை மரபு குறித்து முறையான சான்றுகள்  ஏதுமின்றி இருந்த நிலையில் இந்த கல்வெட்டு கட்டிடக்கலை கட்டுமான மரபு சார்ந்த எண்ணங்களை மாற்றியமைக்கும். கோட்டம் என்ற சொல்லாடல் இலக்கியங்களில் கட்டுமானமாக பயின்று வருவதை இந்தக்கல்வெட்டு உறுதி செய்கிறது. மேலும் இதனை அடிப்படையாகக்கொண்டு தமிழகத்தின் பல இடப்பெயர்களை மீளாய்வு செய்ய இயலும் உதாரணமாக ஆதனக்கோட்டை என்ற ஊர் அங்கிருந்த ஆதன் கோட்டை என்றிருந்து பின்னாளில் மாறியிருக்கும் என நிறுவ முடியும். 

 ஆதன், நாதனது  ஆனது எப்படி  ?  

கீழடி, கொடுமணல், அரிக்கமேடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடந்த அகழ்வாய்வுகளில் ஆதன் என்ற சொல் பயின்று வருகிறது. 

இதன் மூலம்  குழுவின் தலைவர் , மன்னன் இவர்களோடு கலைகளை கற்றுக்கொடுத்த சித்தரும், ஆதன் என்று அழைக்கப்பட்டிருப்பது இக்கல்வெட்டு சான்றின் மூலம் உறுதியாகிறது.

       அதுமட்டுமின்றி இந்த கல்வெட்டில் சொல்லப்பட்ட ஏகன் ஆதன் கோட்டம் என்ற சொல்லாடல் பின்னாளில் ஏகநாதன் பள்ளிப்படை என்றும் தொடர்ச்சியாக ஏகநாதர் திருக்கோவில் என்று  மாறியிருப்பதையும் கருத்திற்கொண்டு  ஆதன் என்ற சொல்லாடலே தமிழ் இலக்கணப் பிணைப்பு விதியின்படி ஏகன் ஆதன் என்பது ஏகனாதன் என்றாகி பின்னாளில் ஏகநாதன் என்றானது, என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

 

     இதே அடிப்படையில் தமிழகத்தில் அமைந்திருக்கும் இன்னும் பிற கோவில்களின் பெயர்களை ஒப்புமை செய்யும்போது அதில் பழங்கால தமிழ் சொற்களின் முன்னொட்டும் ஆதன் என்ற பின்னொட்டுடன் இணைந்து (னாதன்) நாதன் என்ற சொல்லாக திரிபடைந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

மதுரை மன்னன் சொக்கன் ஆதன்   

 சொக்கன் ஆதன் என்ற மதுரையை ஆண்ட மன்னனின் பெயர்தான் சொக்கநாதன் என ஆகியிருக்கிறது என்றும் நாகன் ஆதன் என்ற பெயர் நாகநாதன் என்றும், கயிலாயன் ஆதன் கயிலாயநாதன் என்றும், ராமன் ஆதன் ராமநாதன் என்றும்,  இந்த கல்வெட்டை அடிப்படையாகக்கொண்டு கோயில்களின் நாதன் என்ற சொல்லாடல் ஆதன் என்ற சொல்லிலிருந்து பிறந்தது என நிறுவ முடியும்.

 

 எனவே தமிழ்மொழி வரலாற்றில் தமிழ் சொற்கள் எவ்வாறு பிற மொழிகளில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுவிட்டன என்பதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்திருப்பது தமிழ்மொழி வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

ஆதன் என்ற பெயரில் மன்னர்கள் 

           ஆதன் என்ற சொல் மன்னனனை குறிக்கும் சொல்லாக உள்ளது.  இந்த வழக்கம் சேரர்களிடையேயும் , பாண்டியர்களிடையேயும் உள்ளது.

  உதாரணமாக சேரல் ஆதன் சேரலாதன் என்றும் ,வாழி ஆதன் வாழியாதன் என்றும், ஆதன் உங்கன் ஆதனுங்கன்  என்றும் வழங்கி வந்துள்ளதை சான்றாக கொள்ளலாம் .

    இப்படியாக இந்திய மொழியியல் வரலாற்றில் இது குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடிப்பதோடு மனித வர்க்கவியல் ஆய்விலும் ஒரு சிறந்த பண்பாட்டு தொடர்ச்சி கொண்ட குருகுல நிறுவனத்தின் சித்தர் வழி கல்வி கற்கும் முறைக்கும் புதிய சான்றுகளை தரும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரை மூலம்:.ஆனந்தன் அவர்களின் செய்தி குறிப்பு  

மேற்கோள்கள் : 

1.கிண்ணிமடம் தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு குறித்த நாளிதழ் செய்திகள் 

2.கொடுமணல் , கீழடி, அரிக்கமேடு, அகழ்வாய்வு முடிவுகள் 

கட்டுரையாளர்கள் :

ஆ.மணிகண்டன் , முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ் பலகலைக்கழகம் ,தஞ்சாவூர்.

வே.ராஜகுரு, முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்நாடு திறந்தநிலை பலகலைக்கழகம் ,சென்னை An imbrex of Roof tile and a Special kind of pottery that served as a liquid container were found on palace mound at Porpanaikkottai, Pudukkottai .

  the first phase of the excavation was completed  last week, follow up activities like surface exploration was conducted by archaeological ...