Wednesday, May 22, 2019

பொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை


புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைத்துள்ளது பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 10 கிலோ தொலைவில் அமைந்துள்ளது


  பொற்பனைக்கோட்டையின் அமைப்பு
வட்ட வடிவில் உள்ள கோட்டையின் சுற்றளவு 1.63 கிலோ மீட்டருடனும் , 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகவும் உள்ளது. கோட்டை நான்கு புற வாயில்கள் கொண்டதாகவும் தற்போதைய நிலையில் உள்ளது. கோட்டையின் வடக்குப்புற மண் சுவரின் அடிமானம் சுமார் 50 அடி அகலமுடனும் , 40 அடி உயரத்துடனும் சாய்வாக அமைந்துள்ளது, கோட்டையின் மேற்புறத்தில் பத்து அடி அகலத்துடன் மண் மற்றும் செம்புராங்கல் கொண்ட சுற்றுப்பாதை அமைப்பு உள்ளது. இதன் வெளிப்புறத்தில் நான்கு அடி கால அகலத்தில் சங்க செங் கல்கட்டுமானத்துடன் கூடிய கோட்டைச்சுவர் மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அம்பு எய்யும் அறைகள் (கொத்தளங்கள்) தொடர்ச்சியாக காணப்படுகிறது. சாதாரண மண் மேடல்ல கோட்டைதான் என்பதை தொல்லியல் ரீதியில் அடையாளப்படுத்த மிக முக்கியமான சான்றாகும்.

  பொற்பனைக்கோட்டை சங்க கால கோட்டைகளுக்கான நிகழ்காலச் சான்று
சங்ககால இலக்கியங்களில் சொல்லப்பட்ட மாடமாளிகைகளும் கோட்டை கொத்தளங்களும் முழுவதும் அழிந்துவிட்டதாக கடந்த பத்தாண்டுகள் வரை அனைத்து ஆய்வாளர்களும் நம்பி வந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்றளவும் கோட்டைச்சுவர் அழியாமலும் , அதில் பயன்படுத்தப்பட்ட களிமண் சங்ககால செங்கல் கட்டுமானம் கோட்டைச்சுவரின் நான்கு அடி அகலமுள்ள சுற்று சுவர் மற்றும் கோட்டை கொத்தளத்தின் ப வடிவ கட்டுமானத்தின் அடிக்கட்டுமானம் இன்றளவும் சிதையாமலும் உள்ளது. மேலும் கோட்டையைச் சுற்றிலும் சுமார் 15 ஆழமான, சுமார் 40 அடி அகலத்துடன் அகண்ட அகழியும் ஒரு சில இடங்களில் முழுமையாக மண் மூடி விட்டாலும் மேற்கு மற்றும் வடக்குப்பகுதிகளில் முழுமையாக காண முடிகிறது. இதன் மூலம் தமிழர்களின் மேம்பட்ட வாழ்க்கை முறையை எடுத்துக்கூறும் இலங்கியங்களில் உள்ளவாறு “உயர்வகலம் திண்மை அருமையிந் நான்கும் அமைவரண் என்றுரைக்கும் நூல்” என திருக்குறளின் 743 பாடல் இயம்புவதற்கிணங்கவும் , சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ள கோட்டையின் உள்ளேயும் வெளியேயும் அமைந்திருந்த கருவிகள் , படைக் கலக்கொட்டில்கள் , அரண்மனை, உள்ளிட்ட அம்சங்களைக்கொண்ட மிக முக்கிய சான்றாக இக்கோட்டை உள்ளது.

  சங்ககால இலக்கியங்களில் செங்கல் 

சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின் என்கிறது பெரும்பாணாற்றுப்படை (405) இங்கே சுடுமண் என்பது சுட்ட மண்ணாலான செங்கலை குறிக்கிறது. இட்டிகை நெடுஞ்சுவர் என அகநானூறு ( 167 : 13) பகிர்கிறது இங்கே இட்டிகை எனப்படுவது செங்கலாகும்


கோட்டையிலிருந்த படைக்கலக் கொட்டில் பற்றிய இலக்கிய சான்றுகளும் பொற்பனைக் கோட்டையும்

 படைக்கலக்கொட்டில் என்ற பகுதி ஆயுதங்கள் செய்யும் தொழிற்சாலைகளும் , போர்க்கருவிகளை சேமிக்கும் கிடங்காகவும் பயன்பட்ட கோட்டையின் ஒரு கட்டுமானப்பகுதியாகும். இப்பணியைச்செய்த கொல்லர்கள் பற்றி புறநானூறு (312 : 3) பாடல் “வேல்வடித்துக்கொடுத்தல் கொல்லற்குக் கடனே” என்கிறது. புறநானூறு பாடலில் (95) ல் அவ்வையார் தொண்டைமானிடம் வள்ளல் அதியமான் போர்த்திறம் பற்றி கூறுவதாக எழுதிய பாடலில் “இங்கே படைக்கருவிகள் மயில் தோகை அணியப்பட்டு மாலை சூட்டப்பட்டு திரண்ட காம்பும் , அழகுபட அமைத்து நெய் பூசப்பெற்றுக்காவலுடன் உள்ளன ஆனால் அதியமானின் படைக்கலங்களோ பகைவரைக்குத்தி நுனி முரிந்து செப்பஞ்செய்யக்கொல்லன் உலைக்கூடத்தே கிடக்கின்றன, இதன் வழியாக அவனது வேல் கூர்மையானது என்கிறார். இதில் கூறப்பட்ட படைக்கலக்கொட்டிலும் கொல்லன் உலைக்கூடமும் ஒன்றென கருத முடிகிறது. சங்க கால நடுகற்கள் தமிழகத்தில் இதுவரை சங்க காலத்தைச் சேர்ந்த 5 நடுகற்களே கிடைத்துள்ளன அவற்றில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் தலைவர் முனைவர். கா.ராஜன் தலைமையில் இயங்கிய ஆய்வாளர்கள்,திரு.வி.பி.யதீஸ் குமார் மற்றும் திரு.சி.செல்வ குமார் ஆகியோரடங்கிய குழுவின் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட புலிமான் கோம்பை நடுகற்கள் மூன்றும் (தேனி),தமிழ்நாடு தொல்லியல் துறையால் 2006 ஆம் பதிப்பிக்கப்பட்ட ஐ.மகாதேவன் அவர்களின் தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனும் புத்தகத்தில் வெளிவந்த தாதப்பட்டி இரண்டாம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று (திண்டுக்கல்) அதற்கடுத்த படியாக தஞ்சை தமிழ் பலகலைக்கழக பேராசிரியர் முனைவர் சு.ராஜவேலு ஆய்வு மாணவர்கள் த.தங்கதுரை , சா.பாண்டியன்,ஆ.மோசஸ் குழு வினரால் அடையாளங் காணப்பட்ட பொற்பனைக் கோட்டை நடுகல்(புதுக்கோட்டை) ஒன்றும் உள்ளது.


  பொற்பனைக்கோட்டை நடுகல்

1.கோவென்கட்டிற் நெதிர –
2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்
3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு
4) அங்கபடை தாணைத் தணயன் கணங்
5) குமாரன் கல்

 என்று வாசிக்கப்பட்டுள்ள பொற்பனைக்கோட்டையில் கிடைத்த நடுகல் முக்கோண வடிவத்தில் உள்ளது. இதில் 5 வரிகள் இடம்பெறுகின்றன. கோ வென்கட்டி என்பவர் காலத்தில் பொன்கொங்கர் விண்ணக்கொன் பசுக்கூட்டத்தை கவர அதவ்வன் என்பவருடைய மெய்க்காவல் படைத் தலைவனும் கோட்டையின் காவலருமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன்” இறந்துபட்ட மைக்காக இந்த நடுகல் நட்டுவிக்கப்பட்டதை குறிப்பதாக 2013 ல் வெளிவந்துள்ள ஆவணம் இதழில் கண்டுபிடிப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொற்பனைக்கோட்டைப் இரும்பு உருக்காலைகள் - செந்நாக்குழி

செந்நாக்குழி என்று அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வரும் இவ்வமைப்புகள் சிவந்த அல்லது செம்மை என்ற நெருப்பின்நிற பண்பைக்குறிக்கும் சொல்லான “செந்” என்ற ஒற்றுடன் “நா” என்கிற நெருப்பு சுவாலையை குறிக்கும் பெயர்ச்சொல்லும் குழி எனும் இடப்பெயருடன் இணைந்து “செந்+நா+குழி = “செந்நாக்குழி” என்று அழைக்கப்பட்டு வந்திருப்பதன்மூலம் இது சங்க காலத்தை சேர்ந்த தொல் பழங்கால உருக்கு ஆலையாக இயங்கியதையும் , தமிழர்களின் பண்பாட்டு வழக்கப்படி அவ்விடத்தில் நடக்கும் தொழிலையோ , அல்லது வேறு சில காரணப்பெயர்களிலேயோ இடங்களின் பெயர்கள் வழக்கிலிருப்பதை நாம் காண முடிகிறது. இதே போன்றதொரு காரணப்பெயரோடு செந்நாக்குழி என்று அழைக்கப்பட்டு வருகிறது கிடைக்கப்பட்ட தகவல்களும் , தரவுகளும் , பெயர்களும் சங்ககாலம் தொட்டே இவ்விடத்தில் இரும்பு உருக்கு ஆலை இயங்கியதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. அருகாமையில் காணப்படும் பொற்பனைக்கோட்டையிலுள்ள குளத்திற்கு நீராவிக்குளம் என்றும், இந்த பாறை அமைப்பிற்கு மிக அருகிலுள்ள குளத்திற்கு பனி நாளம் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது, மேற்கண்ட குளத்தின் பெயர்கள் இந்தப்பகுதியின் தொன்மையை உணர்த்துகிறது மேலும் செந்நாக்குழியும் சங்க கால வழக்கில் உருக்கு உலையை இந்நாள் வரை மரபொழியாமல் இருந்திருப்பதையும் உணரமுடிகிறது.  உலக அளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள உலோகப்பிரிப்பு அமைப்புகள் கி.மு 483 ச்சார்ந்த வெள்ளித்தாதுவை பிரிக்கும் பழங்கால தொழிற்சாலை பழங்கால கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அருகே அட்டிகா என்னுமிடத்தில் அமைந்துள்ளதை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது மட்டுமின்றி ஆர்மேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால உலோகத்தாது பிரிக்கும் அமைப்பு கி.மு 300 எனக்கணிக்கப்பட்டுள்ளது பாலஸ்தீனத்தில் கி.மு 1200 எனவும் இதுவே மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உலோகப்பிரிப்பு அமைப்புகளில் பழமையானதாகவும்தொல்லியலா ளர்கள் கருதுகிறார்கள்.

  தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக பிரிப்பு மற்றும் உருக்கு ஆலைகள்
 ஆச்சநல்லூர் , ஆழ்வார் திருநகரி, கொடுமணல், உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக உருக்கு அமைப்புகள் பெரும்பாலும் மண் மற்றும் செங்கல் கட்டுமான அமைப்புகளாகவே உள்ளன. தமிழகத்தில் செம்புராங்கற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் உருக்கு உலையாக இது உள்ளது. இதற்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருக்கு உலைகள் தனியான கட்டுமான அமைப்பிலோ அல்லது மட்பாண்ட கலன்களிலேயே இருந்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலையானது பாறையை துளையிட்டு உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம் இது சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னமாக இதனை கருதலாம்.
  இரும்பு உருக்கு உலை தடயங்கள் 
திருவரங்குளம் பகுதியிலிருந்து பொற்பனைக்கோட்டை வரை உள்ள கோயிற்காடுகள் மற்றும் இரும்புக்கழிவுகளுடன் கூடிய மேடான சில பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகளின் மண்ணாலான உலைகள் பகுதியளவு சிதைந்த நிலையிலும் , இரும்புக்கழிவுகளை பிரித்தெடுக்க பயன்படுத்தப்பட்ட கலன்கள் பல இடங்களிலும் , இரும்பு வார்ப்புக்கு பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண்ணாலான உருக்கு குழாய்கள் உருக்குடன் உறைந்த நிலையிலும் , தனியாகவும், பகுதியளவு சிதைந்த நிலையிலும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. .
வலு சேர்க்கும் பிற்கால வரலாற்று சான்றுகள் 
புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட கே.ஆர் வெங்கட்ராம அய்யர் அவர்களால் தொகுக்கப்பட்டு 1938 ல் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் புத்தகத்தில் “13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த வீரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் திருவரங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருக்குத்தொழிற்சாலைகள் இயங்கிவந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி 1813 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் புள்ளிவிவரக் குறிப்பேட்டில் இரும்புத் தொழிற்சாலைகள் இயங்கிய இடங்களுக்கு பல வழித்தடங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இதற்கு முன்னதாகப் சமஸ்தானத்தால் 1811-ல் பெறப்பட்ட பெய்லி அறிக்கையின்படி ஒரு ஆண்டிற்கு ரூபாய் 1300 மதிப்புள்ள இரும்பு உருக்கு தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதே அறிக்கையின் மூலம் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இரும்பு உருக்கும் ஆலைகள் இயங்கிவந்ததற்கான தரவுகளை அறியலாம்.

 மேற்கோள்கள் :
 1.ஆவணம் இதழ் - 24 , பக்கம் 18, சு.ராஜவேலு த.தங்கதுரை,சா.பாண்டியன்
 2. METALLURGY OF ANCIENT ARMENIA IN CULTURAL AND HISTORICAL CONTEXT ARAM GEVORGYAN, ARSEN BOBOKHYAN Dr. Hist, Institute o f Archaeology and Ethnography, National Academy of Sciences o f Republic Armenia, argev@mail. m arsenbobokhyan@yahoo. com
3. ADICHANALLUR: A PREHISTORIC MINING SITE B SASISEKARAN*, S SUNDARARAJAN*, D VENKATA RAO*, B RAGHUNATHA RAO+ , S BADRINARAYANAN++, S RAJAVEL+++

7 comments:

 1. பொற்பனைக்கோட்டையைப் பற்றிய ஆதாரங்களுடன் கூடிய அருமையான பதிவு. முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரையைப் படிப்பதுபோல இருந்தது. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா தங்களின் ஆதரவோடு....
   பயணிக்கிறோம்

   Delete
 2. மேற்கோள், முன் ஆய்வை சுட்டிக்காட்டிய கட்டுரைக்கு நன்றி, த. தங்கதுரை.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி...தொடர்ந்து பயணிப்போம்

   Delete
 3. அருமையான தகவல். மனம் கனிந்த நன்றி

  ReplyDelete
 4. தீடிரென என் எண்ணத்தில் பொன்பரப்பிகோட்டை எனும் ஊர் உதயமாயிற்று..இவ்வூரை இதுவரை கேள்விபட்டதுமில்லை.. எங்கேயும் படித்ததுமில்லை என்பதை நான் தெளிவாக அறிவேன்..இருப்பினும் விளையாட்டாக கூகுளில் தேடினேன்.. கூகுளின் பதிலை கண்டு வியந்தேன்.

  ReplyDelete
 5. சிறப்பான,விரிவான ஆய்வு.தமிழர் வரலாற்றின் புதிய பக்கங்களை திறந்து காண்பிக்கிறது.

  ReplyDelete

ராஜேந்திர சோழர் காலத்தில் உயிர்நீத்த வணிகக்குழுவினரின், அரிதான நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் கொன்னைக்கண்மாயில் தமிழகத்தில் முதன்முறையாக ராஜேந்திர சோழர் , குலோத்துங்க சோழர்க...