Tuesday, October 2, 2018

திசை விளங்கு திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவர் கல்வெட்டு - புதுக்கோட்டை அருகே கண்டுபிடிப்புபுதுக்கோட்டை மாவட்டம்  அன்னவாசல் வட்டம் செல்லுகுடியில் பழமையான ஒரு கல்வெட்டு இருப்பதாக எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.பூவரசன் அளித்த தகவலைத்தொடர்ந்து பள்ளியின்  தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ்.கஸ்தூரிரங்கன் அளித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன், தலைவர் மேலப்பனையூர்  கரு.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார், உறுப்பினர் ம.மு. கண்ணன் ஆகியோர் அக்கல்வெட்டை படித்தனர். இது கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மெய்க்கீர்த்தியுடன் கூடிய  திசைவிளங்கு திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவர் வணிகக்குழுவின் கல்வெட்டு என கண்டறியப்பட்டது.மன்னருக்கு இணையாக வணிகர்கள் 

இதுவரை தென்னிந்திய வணிகர் குழுக்களின் கல்வெட்டுகள் தமிழகத்தில் 118 ,கர்நாடகாவில்  132 ,ஆந்திராவில்  35, மகராஷ்டிராவில் 2 கேரளத்தில்  8 எண்ணிக்கையிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா (சுமத்ரா), தாய்லாந்து, மியான்மர் ஆகியவற்றில் நான்கும், இலங்கையில் 15 எண்ணிக்கையிலும் என  இதுவரை 314 வணிகக்குழுக்களின்  கல்வெட்டுகள்  அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் மன்னருக்கு இணையான உரிமைகளுடன் மதிப்புமிக்கவர்களாக வணிகர்களும், அவர்தம் பதினெண் கொடி வீரகொடியாரும் கருதப்பட்டனர். குறிப்பாக சோழர்களின் காலத்தில் இத்தகைய வணிகர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு அந்நாட்டிலுள்ள மன்னர்களோடு இணக்கமான உறவுகளைக் கொண்டிருந்தனர். எனவே, பெரும்பாலும் அருகாமை நாடுகளுக்கு தூதுவர்களாக வணிகக்குழுவை சேர்ந்தவர்களையே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதையும் வரலாற்று சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. 
கல்வெட்டின் காலம்
புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடியில் கிடைத்த கல்வெட்டு, மன்னர்களுக்கு இணையாக திசைஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் வணிகக்குழுவின் மெய்க்கீர்த்தியுடன் உள்ளது. இதில் காலம் குறிப்பிடப்படவில்லை. எனினும் முதலாம் இராசேந்திரன் சோழன் பெயர் உள்ளதாலும், எழுத்தமைதி மற்றும் மெய்கீர்த்தியின் அடிப்படையிலும் இக்கல்வெட்டு கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது உறுதியாகிறது. 

செல்லுகுடி வணிகக்கல்வெட்டு 
ஐந்து அடி உயரமுள்ள ஒரு கல்லின் நான்கு பக்கமும் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் 83 வரிகளுள்ளன. இதன் உச்சியில் சங்கு, செங்கோல், அரிவாள், குத்துவிளக்குகள் ஆகியவை கோட்டுருவமாக வரையப்பட்டு பழியலி கள்ளிடைக்கொடி தலைஎன எழுதப்பட்டுள்ளது. இதை இராஜேந்திர சோழன் வலங்கை தலைமையின் சிறப்புப் பெயராகக் கருதலாம்.

ஸமஸ்த புவநாதஎனத் தொடங்கும் இக்கல்வெட்டில் 7 மங்கள வரிகளில் ஸ்ரீ வாசு தேவர், கண்டழி,மூலபத்திரர் போன்றவர்களின் வழி வந்த ஐயபொழில்புர ஸ்ரீபரமேஸ்வரிக்கு மக்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.
பின்பு, நிலாவைதொடும் அளவிலான மாட வீதிகளைக்கொண்ட 18 பட்டணமும் (துறைமுக நகரங்கள்), 32 வேளாபுரமும் (இரண்டாம் நிலை வணிக நிறுவனங்கள் அடங்கிய பாதுகாப்பான நகரங்கள்), காவல் வசதியுடன் வணிகர்களுக்கு பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிட்டங்கிகளுடன் கூடிய 64 கடிகைத்தாவளமும் இருந்ததாகவும் அவ்வணிகக்குழு பற்றிய பெருமைகள் கூறப்படுகின்றன.
குழுவின் முக்கிய அங்கத்தினர்
இக்குழுவில் பலதை(வீரர்) பதினெண் கொடி வீரகொடிகொடியார், செட்டி சீர்புத்திரன்(வீரர்), கவறை (வணிகர்), காசி யவன் விடுத்த காமுண்ட சுவாமி (நிலக்கிழார்), உருத்திரந் விடுத்த ஓலை வாரியன் (கணக்கு எழுதுபவர்),சீரிய செண்டாவனும்(சிறு பணி செய்பவர்) இருந்தனர் என பொறிக்கப்பட்டுள்ளது 


ஐநூற்றுவரின் வளம் 
பலா மரங்களும்மாமரங்களும்வாழையும்பாக்கு மரங்களும்முல்லை மலர் கொடிகளும்குயிலும்கிளியும் குழுமியிருப்பதாகவும்துன்பங்கள் ஏதுமின்றிஒன்றாக கூடிஅவை மகிழ்வுடன், துன்பங்கள் ஏதுமின்றி  இருந்ததையும் அங்கே ஐந்நூற்றுவர் செங்கோலை முன்னிறுத்தி  நேர்மையுடன்,  ஆயிரம்  திசைகளிலும், செழிப்புற ஐஞ்ஞூற்றுவர் வணிக  நிர்வாகம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .


கல்வெட்டிலுள்ள வீரர்கள் 

பாதுகாப்பு பணியிலும்குழுவின் மிக உயர்ந்த பொறுப்பிலும் இருந்த பதினெண் கொடியார்பழ வீரசிங்கன்வலங்கை பாவாடை வீரன், கடிபுரத்து முனைவீரர் பற்றியும் கல்வெட்டு கூறுகிறது. சிங்கன் என்ற பெயர் அரிதாகவே வணிக கல்வெட்டுகளில் காணப்படுவதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது. 

இராசேந்திர சோழ  வலங்கை வல்லபர் :
முதலாம் இராஜ ராஜன் காலத்திலேயே வலங்கை , இடங்கை அமைப்புகள் இருந்ததற்கான சாற்றுகள் கிடைத்துள்ளன, வலங்கை பிரிவில் மேம்பட்ட சமூக பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் , தொழில் புரியும் வர்க்கத்தினரும், இடங்கைப்பிரிவில் சிறு தொழில் செய்யும் குடியினரும் இருந்துள்ளதை சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. வலங்கை வல்லபர் என்ற குழுத்தலைவரே தம்மை இராசேந்திர சோழர் வலங்கை என்று அடையாளப்படுத்திக்கொள்வதோடு தனது தனி அடையாளமாக பதிநெண்கொடி வீரகொடி வலங்கை  அழைத்துக்கொண்டு இக்கல்வெட்டை பொறித்துள்ளார் . இதன்  மூலம் வலங்கை பிரிவில் முக்கியத்துவமிக்க ஒரு நிர்வாகியாக இருந்திருப்பார் என கருதமுடிகிறது.
கல்வெட்டின் நான்காவது பக்கம் சிதைந்த நிலையில் உள்ளபோதிலும்  இறுதி வரிகள் தெளிவாக உள்ளன, இதில்  குழுவினர் செல்லுக்குடிக்கு வழங்கிய கொடை பற்றிய செய்தியானது  “குடுத்தோம் பதினெண் கொடி வீரகொடி  வலங்கை வல்லபர்  செல்விகுடிக்கு” என  நிறைவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் இவ்வூருக்கு நற்பணி செய்வதற்கான சாசன கல்வெட்டாக இதனைக்கருதலாம்.
 
கூட்டுறவுவணிகம் 
பாதுகாப்பு வீரர்களும், வணிகர்களும், கைவினைஞர்களும், சிறு தொழில் செய்வோரும், நிலக்கிழார்களும் இணைந்து உருவாக்கிய இந்த கூட்டுறவு வணிகம் நம்பகத்தன்மை உடையதாகவும், பொருள் விற்று லாபத்தின் ஒரு பகுதியை பொதுகாரியங்களுக்கு செலவிட்டிருப்பதையும், பின் வருங்காலங்களில் நிலம் உள்ளட்டவைகளின் வருவாயின் குறிப்பிட்ட பகுதியை நலத்திட்டங்களுக்கு வழங்கியிருப்பதையும் கல்வெட்டுகள் மூலம் மக்களுக்கு அறிவித்துள்ளதையும் அறிய முடிகிறது. பண்டைய உலக வரலாற்றில் கூட்டுறவு வணிகத்தினை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மேற்கொண்ட போதும், தெற்காசியாவை பொறுத்தவரையில் தென்னிந்திய வணிகர்களான ஐந்நூற்றுவரே தனக்கான முறையான நிர்வாக கட்டமைப்புகளுடனும், நிதி வருவாயை தமக்குள் முறையாக பகிர்ந்து கொள்வது குறித்த வரையறை கொண்டிருந்ததோடு, சூழலுக்கு ஏற்றவாறு மன்னர்களுடன் உறவை ஏற்படுத்தி செயல்படும் அரசியல் நுட்பங்கள் நிறைந்தவர்களாகவும் இருந்துள்ளனர். என்றார் .

                                  நன்றி
  இக்கல்வெட்டை ஆய்வு செய்ய உறுதுணையாக செல்லுகுடி பெரியவர் வீராசாமி , முன்னாள் மாணவர்  ரகுபதி , பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் சஞ்சய் , நிகல்யா , ரம்யா , சிவக்குமார்  ஆகியோரும் செயற்பட்டதாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இணையத்தொடர்புகள்

No comments:

Post a Comment

ராஜேந்திர சோழர் காலத்தில் உயிர்நீத்த வணிகக்குழுவினரின், அரிதான நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் கொன்னைக்கண்மாயில் தமிழகத்தில் முதன்முறையாக ராஜேந்திர சோழர் , குலோத்துங்க சோழர்க...