Saturday, September 2, 2017

கிள்ளுக்கோட்டை அருகே நண்டம்பட்டிபட்டியில் இராசராசனின் முப்பாட்டனான பராந்தக சோழர் காலத்தைய கற்றளிக்கோவில் மண்ணில் புதைந்த நிலையில் கண்டுபிடிப்பு


புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை அருகே நண்டம்பட்டி கிராமத்தில் உள்ள

வீமன்குளத்தின் கரையில் சில மாதங்களுக்கு முன்பு நீர்வரத்து  பாலம் அமைக்கும் 

பணி நடந்துள்ளது. அப்போது சில முழு உருவ கற்சிற்பங்கள் வெளிப்பட்டுள்ளன. 

இது குறித்து தொல்லியல் ஆய்வுக்கழகத்திற்கு மங்கனூர் பிரதீப் , நண்டம்பட்டி ஸ்டாலின் ஆகியோர்  தகவல் தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் இராசேந்தின், நிறுவனர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், உறுப்பினர் பூங்குடி ராசேந்திரன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையிலான கற்சிற்பங்களும் ,பராந்தகசோழன் ஆட்சியைக்குறிக்கும் கல்வெட்டும், கற்றளிக்கோவிலின் கற்கலசமும், ஆவுடையும் அடையாளம் காணப்பட்டது. மேலும் இதேபகுதியின் சற்று அருகில் சமணதீர்த்தங்கரர் கற்சிற்பமும் கண்பிடிக்கப்பட்டுள்ளது.


கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடம்


புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் எல்லைப்பகுதியாக அமைந்துள்ள நண்டம்பட்டி கிராமத்தின் ஒரு பகுதி  புதுக்கோட்டை மாவட்டம் செங்களூர் ஊராட்சியிலும், மற்றொரு பகுதி  தஞ்சாவூர் மாவட்டம்  புதுக்குடி ஊராட்சியிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் குடுக்கன் தரிசு என்ற இடத்தில் ஏராளமான இடைக்காலத்தைய பானை ஓடுகள் விரவி கிடக்கின்றன. இதே பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே கட்டுமானக்குவியல்களும், செங்கற்களும் காணமுடிகிறது.

கற்றளி கோயில்


அடித்தளம் முதல் கலசம் வரை முற்றிலும் கருங்கல்லை கொண்டு எழுப்பப்பட்ட கற்றளிக்கோவில் வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. இது முற்கால சோழர் கலைப்பாணியில் கோயில் கட்டுமான மரபுகளை பின்பற்றி கட்டப்பட்டிருப்பதை புதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட விமான கற்கலசம் , தூண்கள், மற்றும்  தூண்களை தாங்கிப்பிடிக்கும் வகையில் அடித்தளமாக அமைக்கப்பட்ட இரண்டு அடி உயரமுள்ள வட்டவடிவிலான உருளைக்கற்கள் , கோவிலின் விமானத்தின் புறச்சுவர் விளிம்புகளில் அமைக்கப்பட்ட குரங்கு மற்றும் தேவகணங்களின் உடைந்த தலைப்பகுதிகள் ஆகியவற்றின்  மூலம் இவ்விடத்தில் ஒரு முழுமையான கற்றளிக்கோவில் இருந்துள்ளதை உறுதிபடுத்த முடிகிறது
கற்றளியின் காலம்


கட்டுமானப்பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டை ஆதாரமாகக்கொண்டு மதிரை கொண்ட கோப்பரகேசரியான பராந்தகன் ஆட்சி செய்த கி.பி 907 முதல் 950 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுப்பியிருக்கக்கூடும் என அனுமானிக்க முடிந்தாலும் இங்கே காணப்படும் சிற்பங்கள் குறிப்பாக முருகன் , கௌமாரி உள்ளிட்ட சிற்பங்கள் காலத்தால் முந்தையதாக இருக்க வாய்ப்புள்ளது. எனில் இக்கற்றளி இதற்கு முன்பே கட்டமைக்கப்பட்டு அதன் பிறகு கட்டுமானங்களை நீட்டிருத்திருக்கவும் வாய்ப்புள்ளது.அடையாளம் காணப்பட்ட கற்சிற்பங்களும் காலமும்தமிழர்களின் தாய்வழிச்சமூகத்தின் அடையாளமான முற்கால சோழர் கலைப்பாணியிலான தவ்வை,மாந்தன் , மாந்தி சிற்பம் , அமர்ந்த நிலையில் பல்லவர் கலைப்பாணியிலான  முருகன் சிற்பங்கள் இரண்டும்,சப்த கன்னியரில் ஒருவரான கௌமாரி சிற்பமும்,முற்கால சோழர் கலைப்பாணியில் உமையாளை மடியமர்த்திய நிலையில் சிவனார் சிற்பம் ஒன்றும், தரையில் கையூன்றிய நிலையில் தேவியாரை சாந்தமாக்கும் தம்பதி சகிதமான சிவனார் சிற்பமும், கையில் வில்தாங்கிய நிலையில் பிச்சாடனார் சிற்பமும், மிக நேர்த்தியான வடிவில் பிரம்மா சிற்பமும், முகம் சிதைந்த சண்டிகேசுவரர் சிற்பமும், உடல் இல்லாத நிலையில் இடுப்பிலிருந்து பாதம் வரை காணப்படும் பைரவர் சிற்பமும், மிக நேர்த்தியான அய்யனார் சிற்பமும், நின்ற நிலையில் பார்வதியார் சிற்பமும், நான்கு அடி நீளம் இரண்டு அடி உயரமுள்ள இரண்டு நந்தி சிற்பங்களும், தாமரை இதழ் வடிவில் அமைக்கப்பட்ட ஆவுடையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மண்ணில் புதைந்த நிலையில் முட்புதர்களுக்குள்ளாக ஏராளமான சிற்பங்கள் இருப்பதை அனுமானிக்க முடிகிறது.


சமண தீர்த்தங்கரர் சிற்பம்


தியான கோலத்தில் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள முக்குடை அமைப்புடன் கூடிய சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும் இக்கோவில் கட்டுமானங்கள்  கண்டறியப்பட்டுள்ள பகுதிக்கும் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியிலேயே சமணப்பள்ளி இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் சமணமும் சைவமும் பரவி இருந்திருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது.இராசராசனின் முப்பாட்டன் பராந்தக சோழன் கல்வெட்டு


கோயில் கட்டுமானப்பகுதிக்கு மிக அருகில் உள்ள வயல்வெளியில் காணப்படும் கல்வெட்டில் மங்கல வரியுடன்


“மதிரைகொண்ட கோப்பரகே(சரி) ..... மியானலூர்ளக்ய மல்ல முத்தரையனினு....” என்ற செய்தியடங்கிய துண்டு கல்வெட்டு கிடைத்திருப்பதன் மூலம் இராசராசனின் முப்பாட்டனான மதிரைகொண்ட கோப்பரகேசரி என்ற பட்டப்பெயருடன்  வழங்கப்பட்ட பராந்தக சோழன் காலத்தில் மியானலூர்ளக்ய மல்ல முத்தரையன் என்பவர் இக்கற்றளியை எழுப்பிருக்கக்கூடும் அல்லது இக்கோவிலை புனரமைத்திருக்கக்கூடும் என அனுமானிக்க முடிகிறது.இந்தக்கள ஆய்வில் மங்கனூர் சுதிவர்மன் , கிள்ளுக்கோட்டை லெட்சுமணன்.  நண்டம்பட்டி கிராமத்தைச்சேர்ந்த இளைஞர்கள்  சூரியமூர்த்தி, ரஜினி, ஜான், வடிவேல்,பிரேம்குமார், டேவிட், ஜெயசீலன்,வடிவேல் கௌதம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

ராஜேந்திர சோழர் காலத்தில் உயிர்நீத்த வணிகக்குழுவினரின், அரிதான நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் கொன்னைக்கண்மாயில் தமிழகத்தில் முதன்முறையாக ராஜேந்திர சோழர் , குலோத்துங்க சோழர்க...