Thursday, September 29, 2016

சங்ககால செங்கல் கோட்டைக்கு அருகே தமிழரின் தொழில்நுட்பத்திற்கு சான்றாக 2500 ஆண்டுகள் பழமையான உலோக தொழிற்கூடம் – கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைகோட்டை அருகேயுள்ள வனப்பகுதியிலுள்ள சமதள செம்பாறையில் சங்க காலத்தை சேர்ந்த 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழரின் தொழில் நுட்பத்தை உலகறியச்செய்யும் உலோக தொழிற்கூடத்தின் உருக்கு உலைகள் மற்றும் குளிரூட்டும் அமைப்பு  புதுக்கோட்டை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் புதுக்கோட்டை மரபுநடை பயணத்தின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரபு நடை
புதுக்கோட்டையில் இயங்கிவரும் தொல்லியல் ஆய்வுக்கழகம் , மற்றும் தொல்லியல் வரலாறு  மற்றும் மரபுசார் ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலசமங்கலம்,திருக்கட்டளை, பொற்பனைகோட்டைக்கு அருகாமையில் உள்ள வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் புதுகை செல்வா , ஆசிரியர் கஸ்தூரி ரெங்கன் ஆகியோர் ஒருங்கிணைப்பில்  புதுக்கோட்டை மரபுநடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப்பயணத்தை அறிவியல் இயக்க துணைத்தலைவர் பொன்.கருப்பையா தொடங்கி வைத்தார். மொழி ஆர்வலர் சீ.அ.மணிகண்டன் இயற்கை விவசாய ஆர்வலர் குமரேசன் விதைக்கலாம் அமைப்பின் நிறுவனர்கள்  மலையப்பன் ,சிவாஜி மரபுக்கலைகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர்  பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் தேசிய ஆர்வலர்  பாரி தலைமை ஆசிரியர்  குருமூர்த்தி, ஆசிரியர் முன்னேற்ற  சங்க செயலர் பழனிச்சாமி மற்றும் அசோக் நகர் பள்ளி மாணவர்கள் , தொல்லியல் ஆய்வுக்கழக ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தமிழ் மரபு சார்ந்த கருத்துக்களை குழுவினரிடையே பகிர்ந்தனர்.
தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் கரு.ராஜேந்திரன் அடுத்த பயணம் நார்த்தாமலை மலைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என்ற முன்வைப்போடு பயண நிறைவுரையாற்றினார்.

இந்த கண்டுபிடிப்பு குறித்து பயணத்தின் அமைப்பாளரும்,  தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனருமான மங்கனூர் மணிகண்டன் கூறியதாவது 

இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள உலோகப்பிரிப்பு அமைப்புகள்
கி.மு 483 ச்சார்ந்த வெள்ளித்தாதுவை பிரிக்கும் பழங்கால தொழிற்சாலை பழங்கால கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அருகே அட்டிகா என்னுமிடத்தில் அமைந்துள்ளதை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது மட்டுமின்றி  ஆர்மேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால உலோகத்தாது பிரிக்கும் அமைப்பு கி.மு 300 எனக்கணிக்கப்பட்டுள்ளது பாலஸ்தீனத்தில் கி.மு 1200 எனவும் இதுவே  மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உலோகப்பிரிப்பு அமைப்புகளில் பழமையானதாகவும் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள். 


தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக பிரிப்பு மற்றும் உருக்கு ஆலைகள்
ஆதிச்சநல்லூர் , ஆழ்வார் திருநகரி, கொடுமணல், உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக உருக்கு அமைப்புகள் பெரும்பாலும் மண் மற்றும் செங்கல் கட்டுமான அமைப்புகளாகவே உள்ளன.  தமிழகத்தில் செம்புராங்கற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் உருக்கு உலையாக இது உள்ளது. இதற்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருக்கு உலைகள் தனியான கட்டுமான அமைப்பிலோ அல்லது மட்பாண்ட கலன்களிலேயே இருந்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலையானது பாறையை துளையிட்டு உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம் இது சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னமாக இதனை கருதலாம்.உலோக உலை என்பதற்கான சான்றுகள்
செம்புராங்கற்படுகையில் வெட்டப்பட்டுள்ள குழிகள் சுமார் இரண்டரை அடி மட்டுமே ஆழம் உள்ளது. இது இரண்டு வடிவங்களில் முழு வட்ட வடிவம் நீள் வட்ட வடிவம்,இதில் உருக்கு உலை வட்ட வடிவத்துடன் உள்ளதோடு ஒரு அடி ஆழத்தில் நான்கு செ.மீ விட்டமுடைய துளை காணப்படுகிறது. அதன் நேர் எதிராக மாடக்குழி போன்ற அமைப்பும் அதற்கு சற்று கீழாக வரிசையான நான்கு சிறு துளைகளையும் காணமுடிகிறது, இத்துளையமைப்பானது காற்றை உலைக்குள் செலுத்துவதற்கான உலைத்துருத்தி என்று பொருள்படும் குருகு துருத்தி எனும் தோலாலான காற்றடி கருவியின் நீண்ட  உலோக உருளைப்பகுதியை பொருத்துவதற்கானவை என்பதை ஊகிக்கமுடிகிறது. 
நீள்வட்ட வடிவிலான குழிகளில் உலோகங்களின் தாதுக்களை உருக்குவதற்கு முன்னதாக அடர்ப்பிக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கவேண்டும் என சமீபத்தைய உலோகத்தாது அடர்பிக்கும் முறையைக்கொண்டு அனுமானிக்க முடிகிறது. 

இந்த வெப்ப உலைக்குழிகளுக்கு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கதிர் உருளை வடிவ குழியானது ஆழம் குறைவாகவும் மையப்பகுதி அதிக விட்டத்துடனும் இருமுனைப்பகுதிகளும் குறுகலாகவும் உள்ளது. இப்பகுதியானது தாதுக்களிலிருந்து பிரிக்கப்பட்ட தூய உலோக கட்டிகள் ஆயுதம் உள்ளிட்ட வார்ப்பு பொருட்கள் போன்றவற்றை குளிர்விக்கும் நீர்க்கலவை உள்ள தொட்டியாக இருந்துள்ளதை ஏனைய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெப்ப உலோக உருக்கு உலைகள் மூலம் உணர முடிகிறது.
 மேலும் இந்த தகவல்களுக்கு வலுசேர்க்கும் வகையில் இரும்பையும் அலுமினியத்தையும் கொண்ட அடிப்படை தாதுப்பொருளான  லேட்டரைட் கற்கள் எனப்படும் செம்புராங்கல் (அயர்ன் அலுமினியம்   சிலிக்கேட் ) இப்பகுதியில் மிகுதியாக காணப்படுகிறது அத்துடன்  ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் மிகப்பெரிய உலோகக்கற்கழிவுகளை பல இடங்களில் காணமுடிகிறது. மேலும்  வெப்ப உலைப்பூச்சு மற்றும் உருக்கு பரப்பில் நிரப்பப் பயன்படுத்தப்படும்  வெண்மை நிற கற்களான குவார்ட்சைட் எனப்படும் சீனிக்கற்கள் மிகுதியாக சுற்றுவட்டாரப்பகுதியில் காணப்படுவதன் மூலம் உலோக உருக்கு ஆலை இப்பகுதியில் அமைந்துள்ளதை நிறுவ முடிகிறது . உலையின் காலம்
இந்த வெப்ப உருக்கு உலையானது அருகாமையில் அமைந்துள்ள சங்ககால மண் மற்றும் பெரிய வடிவிலான செங்கற்களால் அமைக்கப்பட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொண்ட பொற்பனைக்கோட்டைக்கு வடபுறமாக மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு சங்க்காலத்தை சார்ந்த தமிழிக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி இங்கு ஆய்வு செய்துள்ள தொல்லியலாளர்கள் கிமு 5 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது என தகவல் பகிர்ந்துள்ளதன் அடிப்படையில் இந்த பழங்கால தொழிற்கூடத்தை 2500 ஆண்டுகள் பழமையானதாக கருதலாம். அதே நேரத்தில் மட்பாண்ட உருக்கு உலைகளே 3000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் நிலையில் முழுவதும் செம்புராங்கல்லில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது செம்பு காலத்தை சேர்ந்ததாகவும் இருக்க வாய்ப்புள்ளது, எனினும் உருக்கு உலையை பல்வேறுபட்ட வயதுகணிக்கும் நவீன தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் துல்லியமாக காலத்தை அறிந்துகொள்ள முடியும்.
அரசுக்கு மரபுவழி பயணக்குழுவின் கோரிக்கை
இந்த மரபு நடைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் மரபுவழி புகைப்படக்கலைஞர் புதுகை செல்வா, மலர்த்தரு இணைய ஆசிரியர் கஸ்தூரிரெங்கன், ஆகியோர் கூறியதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை அரசு சுற்றுலா தளமாக அறிவிப்பதோடு , கேட்பாரற்று கிடக்கும் கல்வெட்டுகள் மற்றும் சிலைகள் உள்ளிட்டவைகளை மாவட்ட நிர்வாகம் ஒரு பாதுகாப்பான இடத்தை ஒதுக்கி முறையான பராமரிப்போடு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தற்போது உள்ள அருங்காட்சியகத்திற்கு போதுமான இட வசதி இன்மையால் சேகரிக்கப்படும் பழங்கால பொருட்களை காட்சிக்கு வைப்பதில் சிக்கல் உள்ளது என்பதை கருத்திற்கொண்டு, மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் தொல்லியல் பாதுகாப்பு மையம் ஒன்றை அமைத்திடவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


No comments:

Post a Comment

ராஜேந்திர சோழர் காலத்தில் உயிர்நீத்த வணிகக்குழுவினரின், அரிதான நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் கொன்னைக்கண்மாயில் தமிழகத்தில் முதன்முறையாக ராஜேந்திர சோழர் , குலோத்துங்க சோழர்க...